அம்மா இறந்தது தெரியாமல் பக்கத்தில் படுத்து தூங்கிய 5 வயது சிறுவன்: துயர சம்பவம்!

இந்தியாவில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஓஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு தனது 5 வயது பையனுடன் வந்த பெண் சிறிது நேரத்தில் இறந்துவிட, அதுபற்றி அறியாமல் அவரது பையன் அவர் அருகே படுத்து தூங்கியது, பார்த்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.

ஹைதராபாத் நகரில் உள்ள ஓஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் (11-2-2018) இரவு 11.30 மணி அளவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒரு இளம் பெண்ணும், அவரின் மகன் 5 வயது மகனும் வந்தனர். அந்த இளம் பெண்ணுடன் வேறுயாரும் உதவிக்கு வரவில்லை.

மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண் தன்னால் சுவாசிக்க சிரமமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், அந்தப் பெண் இதயநோய் பிரச்சினையில் சிக்கி இருப்பதை அறிந்து உடனடியாக செயற்கை சுவாசத்துக்கு ஏற்பாடு செய்து, சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும், 30 நிமிடங்களில் அந்த இளம் பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, இளம்பெண் மரணம் குறித்து காவல்துறைக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். அதன்பின் அந்தப் பெண்ணின் உடலை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல ஊழியர்கள் சென்றனர்.

அப்போது, தனது தாய் இறந்துவிட்ட துயரமான சம்பவம் நடந்தது தெரியாமல், அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த 5-வயது சிறுவன் தனது தாயின் அருகே படுத்து சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.

சிறிது நேரத்துக்குப் பின் அறைக்கு வந்து பார்த்த மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்தக் காட்சி கண்ணீரை வரவழைத்துவிட்டது. அதன்பின், அங்கிருந்த பிற நோயாளிகளின் உறவினர்கள் அந்த சிறுவனை எழுப்பி தங்கள் வசம் வைத்துக்கொண்டனர்.

அந்த இளம் பெண் வைத்திருந்த ஒரு சிறிய பையில், ஆதார் கார்டு இருந்தது. அந்த ஆதார் அட்டையில் அந்தப் பெண்ணின் பெயர் சமீனா சுல்தானா என்றும், கட்டுமானத் தொழிலில் தினக் கூலியாக வேலை செய்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து உதவும் கரங்கள் எனும் தொண்டு நிறுவனத்தின் அதிகாரி முஸ்தபா ஹசன் அஸ்காரியிடம் இளம் பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் கூறினர்.

அந்த அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில், சுல்தானாவின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவரைவிட்டுச் சென்றுவிட்டார். தற்போது அந்தப் பெண் வேறுஒரு நபருடன் ராஜேந்திரா நகரில் வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.

அதன்பின் மைலார்தேவபள்ளி காவல்துறையினர் உதவியுடன், அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 18 மணி நேர தேடுதலுக்குப் பின் சுல்தானாவின் பெற்றோர்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும், ஜஹீராபாத் நகரில் வசித்து வருகின்றனர்.

அவர்களிடம் சுல்தானா இறந்த தகவலைக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதன்பின் சுல்தானாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைத்து இலவசமாக ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுத்தனர். அந்த சிறுவனையும் சுல்தானாவின் பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *