இயக்குநர் பாரதிராஜா மீது இந்து முன்னணி புகார்: முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

இரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து ’தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்துப் பேசியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. மேலும், கடந்த 18-1-2018 அன்று சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘கடவுள் 2’ படத்தின் துவக்க விழாவில் பேசியபோதும், வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா பேசியிருந்தார்.

அந்தப் பேச்சில், “கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்தால் நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்கமாட்டோம்; வைரமுத்துவுக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், அதற்காக தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்” என்றதுடன் விநாயகர் ஓர் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்றும் விமர்சித்திருந்தார்.

இது குறித்து, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகப் பாரதிராஜாவுக்கு எதிராக 19-1-2018 அன்று இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி. நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (13-2-2018) நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், “பாரதிராஜா மீதான புகாரை விசாரிக்கவும், விசாரணையில் அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிந்தால் வழக்குப் பதிவு செய்யவும்” என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *