நான் பெரிய ரவுடி இல்லை: ரவுடிகள் படைசூழ பிறந்தநாள் கொண்டாடிய பினு வாக்குமூலம்!

“நான் பெரிய ரவுடி இல்லை; சர்க்கரை நோயால் அவதிபட்டு வருகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என ரவுடி பினு பரிதாபமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகளோடு, மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் பெரிய அளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஒரேநேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால், பிறந்த நாள் நாயகனான ரவுடி பினு காவல்துறையினர் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பினு கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது முதல் மனைவி காலமாகிவிட்டார். தற்போது 2-வதாக ஒரு பெண்ணை காதலித்து பினு திருமணம் செய்துள்ளார். கராத்தே வீரரான பினு முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் ஆதரவோடு ரவுடியாக மாறிவிட்டதாக கூறப்பட்டது.

தப்பி சென்ற பினுவை காவல்துறையினர் சுட்டு பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். இது பற்றி தகவலறிந்த பினு இன்று (13-2-2018) திடீரென சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினரின் மோதல் கொலைக்கு அஞ்சியே பினு சரணடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பினுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முன்னதாக பினு வெளியிட்டுள்ள காணொளியில், “நான் பெரிய ரவுடி இல்லை; சர்க்கரை நோயால் அவதிபட்டு வருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள். 50-வது பிறந்தநாளை கொண்டாட கரூரில் இருந்து என் தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான். நான் திருந்தி வாழ ஆசைப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தேன். நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை” என கதறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மன்னிக்கும்படி பினு கதறும் காணொளி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *