கொழும்பு அரசியலில் தொடரும் பரபரப்பு: மைத்திரி – ரணில் நள்ளிரவு வரை பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று நேற்று நள்ளிரவு வரை இடம்பெற்றதால், கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தையும் , இணக்கமான முடிவுக்கு வராத போதும், அரசாங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க விசேட குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆளும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன தோல்வியை சந்தித்திருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மீது அரசியல் ரீதியான கடும் அழுத்தங்கள்ஏற்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் இரண்டு தடவைகள் சந்தித்து பேசியிருந்தனர். ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் குறித்த இருவரும் நேற்றிரவு சந்தித்து மந்திராலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஐக்கிய தேசியக் கட்சியின், மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அரசின் எதிர்காலத்தை விசேட குழுவே தீர்மானிக்கவுள்ளதால், அடுத்து வரும் நாள்களில் கொழும்பு அரசியல் இன்னும் பரபரப்பான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *