ராஜீவ்காந்தி அரசு மீதான போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு: நீதிபதி திடீர் விலகல்!

இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி கான்வில்கர் நேற்று விலகிக்கொள்வதாக அறிவித்தார். தமது விலகலுக்கு அவர் எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

ராஜீவ்காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது, கடந்த 1986-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டிலிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகளை வாங்க, இந்திய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, ஸ்வீடன் நாட்டின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் அதே ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி ரூ.1,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்நிலையில், போபர்ஸ் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு சுமார் ரூ.64 கோடி அளவில் கையூட்டு வழங்கப்பட்டதாக ஸ்டவீன் நாட்டு ரேடியா ஒன்றில் 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்தி வெளியானது. இது, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் களத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், போபர்ஸ் விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இதுதொடர்பாக எந்த விசாரணை நடவடிக்கையையும் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. போபர்ஸ் விவகாரத்தின் தாக்கமே, அத்தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக கருதப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டு மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன், போபர்ஸ் விவகாரத்தை விசாரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அதன்படி, 1990-ஆம் ஆண்டு போபர்ஸ் முறைகேடு குறித்து சிபிஐ முதன்முதலாக வழக்குப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில், ராஜீவ் காந்தி 1991-இல் உயிரிழந்தார். அதன் பின்னர், 1999-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் பத்நகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, இடைத்தரகர் வின்சட்டா, குவாத்ரோச்சி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதனிடையே, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலமாகிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2004-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிந்துஜா சகோதரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ அப்போது மேல்முறையீடு செய்யவில்லை. தீர்ப்பு வெளியிடப்பட்டு 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாததால் இதுவே இறுதித் தீர்ப்பாக கருதப்பட்டது.

இந்தப் பின்னணியில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான 5 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. இதனால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, போபர்ஸ் வழக்கானது மீண்டும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

மிக பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், போபர்ஸ் வழக்கு மீதான விசாரணை நேற்று (13-2-2018) நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக ஏ.எம். கான்வில்கர் திடீரென அறிவித்தார். எனினும், தனது இந்த முடிவுக்கு அவர் எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, போபர்ஸ் வழக்கை விசாரிக்க, மார்ச் 28-ஆம் தேதி புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *